
வாசலில் வரவேற்கும் பளீர் சிரிப்புடன் மங்களகரமான மஞ்சளில் கொன்னை பூங்கொத்துக்கள் சுண்ணாம்பு பூசப்பட்டு காவியில் கோலம் போட்ட மூன்றடி உயர சிறிய துளசி மாடம் பகலின் அயர்ச்சியை இரவில் கலைத்தபடி ஆசுவாசமாக அமர்ந்த கடப்பா கல் திண்ணை திருடன் வந்தால் துரத்திவிடக்கூடிய முறைப்பு பார்வையோடு ஜன்னல் கம்பியில் திருஷ்டி கணபதி படம் காற்றின் தாலாட்டில் அசைந்து ஆடியபடி மாவிலை தோரணம் நம்மை நமக்கே காட்டியபடி எட்டி நின்று வரவேற்கும் முகம் பார்க்கும் கண்ணாடி பளீர் ஆரஞ்சு நிறத்தில் ப்ளை வுட் வாங்கி தாத்தா பார்த்து பார்த்து தச்சனிடம் செஞ்சு வாங்கிய இருக்கை மேஜைகள் யார் வருவார் என்று ஏங்கி கொண்டு காத்திருப்பது போல் எந்நேரமும் விளையாட தயாராயிருக்கும் அகலமான ஒற்றை ஊஞ்சல் பஞ்சு மெத்தையே இருந்தபோதும் போட்டி போட்டு கொண்டு இடம் பிடிக்கும் தாத்தாவின் சாய்வு நாற்காலி சாதுவாய் நின்றிருக்கும் எந்நேரமும் சாயக்கூடிய மர அலமாரி யார் வந்தாலும் அரவணைத்து தாய் மடி துயில் போல் ஆனந்தம் அளிக்கும் இரும்பு கட்டில் எந்த பெட்டியில் எந்த பொக்கிஷங்களிருக்கும் என்று அறியாமல் மாயமாய் மறைத்திருக்கும் பரண்(ம்)பொருள் கடவுளிடம் அனுமதி கேட்டு உள்ளே நுழைய தோதுவாய் மணிகள் மாட்டிய பூஜையறை கதவு பழையதே ஆனாலும் புதிதுபோல் பளிச்சிடும் அடுக்களையில் அடிக்கியிருக்கும் எவர்சில்வர் ஹார்லிக்ஸ் பாட்டில்கள் கருவேப்பிலை பறிக்க தோதாய் இருக்கும் கதவில் தொங்கும் தாத்தா கம்பு சில்லென்று காற்றுவீசும் துவைக்கிற கல் கொண்ட அமைதியான கிணற்றடி குயிலும் காகமும் அமரும் மா மாமரம் நித்தமும் பூக்கும் நித்தியமல்லியும் இரவில் மலரும் பவழமல்லியும் தேரையை தன் மடிப்பில் மறைத்திருக்கும் இளம் வாழைகளும் அடிக்கு அடி முளைத்து நிற்கும் கருவேப்பிலை கன்றுகளும் நீர் பாய்ச்சும் வேகத்திலேயே வெகுண்டெழும் மண்வாசனையும் வீட்டை சொர்கமாக்கும் செல்ல சொந்தங்களும் அத்தனையையும் பக்குவமாக பிணைத்து வீடுகடத்தினேன் என் நினைவுகளில் மணம் முடித்து புகுந்த வீட்டிற்கு புறப்படும்போது





