
இத்தோடு ஈரேழு முறை சொல்லிக் கொடுத்து விட்டாள்— சாம்பார் பொடி வீட்டிலேயே செய்யும் முறை மனம் கேட்கவில்லை ஒருவேளை சோம்பேறித்தனமோ? இருக்கலாம்! பல தடவை பக்கத்து கடைக்கும் போய் வந்தாகிவிட்டது சாம்பார் பொடி பாக்கெட்டில் இருந்தும் வாங்க மறுத்தது மனம்... அம்மா தொலைபேசியில் உறுதி அளித்தாள் — 'கவலைப்படாதே நான் சொல்லும்படி செய்தால் என் கை மணம் அதில் வரும்' இருந்தும் ஏற்க மனமில்லை மனதின் எதோ ஒரு மூலையிலிருந்து வரும் அந்த ஏக்கமே அறியும் ஏறிக்கொண்டிருக்கும் அம்மாவின் வயதை ஏற்க மனமில்லாமல் கடத்திக்கொண்டு பொத்திவைக்க பார்க்கிறேன் அவள் அரைத்து அனுப்பும் சாம்பார் பொடியையும் அவள் ஆயுளையும் — என் சமையலறை டப்பாவில்... Written as part of #BlogchatterFoodFest.