PC: Designed by the Author
வாசலில் வரவேற்கும் 
பளீர் சிரிப்புடன் 
மங்களகரமான மஞ்சளில் 
கொன்னை பூங்கொத்துக்கள் 

சுண்ணாம்பு பூசப்பட்டு 
காவியில் கோலம் போட்ட 
மூன்றடி உயர
சிறிய துளசி மாடம் 

பகலின் அயர்ச்சியை 
இரவில் கலைத்தபடி 
ஆசுவாசமாக அமர்ந்த 
கடப்பா கல் திண்ணை 

திருடன் வந்தால் துரத்திவிடக்கூடிய 
முறைப்பு பார்வையோடு 
ஜன்னல் கம்பியில் 
திருஷ்டி கணபதி படம் 

காற்றின் தாலாட்டில் 
அசைந்து ஆடியபடி 
மாவிலை தோரணம் 

நம்மை நமக்கே காட்டியபடி 
எட்டி நின்று வரவேற்கும் 
முகம் பார்க்கும் கண்ணாடி 

பளீர் ஆரஞ்சு நிறத்தில் 
ப்ளை வுட் வாங்கி 
தாத்தா பார்த்து பார்த்து 
தச்சனிடம் செஞ்சு வாங்கிய 
இருக்கை  மேஜைகள் 

யார் வருவார் என்று ஏங்கி கொண்டு 
காத்திருப்பது போல் 
எந்நேரமும் விளையாட தயாராயிருக்கும் 
அகலமான ஒற்றை ஊஞ்சல் 

பஞ்சு மெத்தையே இருந்தபோதும் 
போட்டி போட்டு கொண்டு 
இடம் பிடிக்கும் 
தாத்தாவின் சாய்வு நாற்காலி

சாதுவாய் நின்றிருக்கும் 
எந்நேரமும் சாயக்கூடிய 
மர அலமாரி 

யார் வந்தாலும் அரவணைத்து 
தாய் மடி துயில் போல் 
ஆனந்தம் அளிக்கும் 
இரும்பு கட்டில் 

எந்த பெட்டியில் 
எந்த பொக்கிஷங்களிருக்கும் 
என்று அறியாமல் 
மாயமாய் மறைத்திருக்கும் 
பரண்(ம்)பொருள்

கடவுளிடம் அனுமதி கேட்டு 
உள்ளே நுழைய தோதுவாய் 
மணிகள் மாட்டிய 
பூஜையறை கதவு 

பழையதே  ஆனாலும் 
புதிதுபோல் பளிச்சிடும் 
அடுக்களையில் அடிக்கியிருக்கும் 
எவர்சில்வர் ஹார்லிக்ஸ் பாட்டில்கள் 

கருவேப்பிலை பறிக்க 
தோதாய் இருக்கும் 
கதவில் தொங்கும் தாத்தா கம்பு 

சில்லென்று காற்றுவீசும் 
துவைக்கிற கல் கொண்ட 
அமைதியான கிணற்றடி 

குயிலும் காகமும் 
அமரும் மா மாமரம் 

நித்தமும் பூக்கும்   
நித்தியமல்லியும் 
இரவில் மலரும் 
 பவழமல்லியும்

தேரையை தன் மடிப்பில் 
மறைத்திருக்கும் 
இளம் வாழைகளும் 

அடிக்கு அடி 
 முளைத்து நிற்கும் 
கருவேப்பிலை கன்றுகளும் 

நீர் பாய்ச்சும் வேகத்திலேயே 
வெகுண்டெழும் 
மண்வாசனையும் 

வீட்டை சொர்கமாக்கும் 
செல்ல சொந்தங்களும் 

அத்தனையையும் 
பக்குவமாக பிணைத்து 
வீடுகடத்தினேன் 
என் நினைவுகளில் 

மணம் முடித்து 
புகுந்த வீட்டிற்கு 
புறப்படும்போது 

21590cookie-checkவீடுகடத்தினேன் – ஓர் கவிதை