உணர்வும் ஆன்மாவும் கலந்த கவிதைப் பயணம்

“கலையும் கலைஞரும்” என்பது கலை மற்றும் கலைஞர்களை நெருக்கமாக அறிமுகப்படுத்தும் ஒரு தொடர்.
ஒரு கலைஞனின் சிந்தனை, செயல்முறை, அனுபவங்கள் மற்றும் தத்துவங்களை உரையாடல் வழியாகப் பதிவு செய்வதே இதன் நோக்கம்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகும் இந்தத் தொடர், கலையின் வடிவங்களையும் அதன் பின்னுள்ள மனிதர்களையும் வெளிச்சமிடும் ஒரு பயணம்.
இந்த மாதத் தொடரில், என் மனத்திற்கு நெருக்கமான ஒரு கலைஞரை உங்களிடம் அறிமுகப்படுத்துகிறேன்.
திருமதி லலிதா பஞ்சாபகேசன் என்னுடைய உறவினர். எங்களுக்கிடையில் கணிசமான வயது வித்தியாசம் இருந்தாலும்,அதைத் தாண்டி எங்களை இணைப்பது எழுத்தும், கலை ரசனையும் பகிரும் ஒரு தோழமை.
கடந்த சில ஆண்டுகளாக நான் திருமதி லலிதா பஞ்சாபகேசன் அவர்களுடன் பணியாற்றி வருகிறேன். அந்தப் பயணம் முழுவதும், நான் அவரின் எழுத்துகளின் தீவிர ரசிகையாகவே இருந்து வந்திருக்கிறேன்.
அவரின் எழுத்துகள் நேர்மையானவை. அஞ்சாதவை. பெண்ணியமும் பெண்மையும் ஒருசேர கலந்தவை. உணர்ச்சியால் நனைந்தவை; அதே நேரத்தில் காட்சிகளால் (imagery) நிரம்பியவை.
இந்த உரையாடலை ஒரு பேட்டியாக அல்ல, ஒரு ரசிகையின் கேள்விகளாகவே நான் பார்க்கிறேன்.
சில கலைஞர்களின் கவிதைகள் மட்டும் அல்ல அவர்களது வாழ்வுமே ஒரு கவிதை போல இருக்கும்.
லலிதா பஞ்சாபகேசன் அவர்களுடன் பேசும்போது கவிதை என்பது எழுதப்படும் ஒன்றல்ல, வாழப்படும் ஒன்று என்று புரிகிறது.
இந்த உரையாடலில், அவர் தன்னை எப்படிப் பார்க்கிறார், அவரின் பார்வையில் கலை என்றால் என்ன, அவரின் எழுத்து பயணம் எப்படித் தொடங்கியது, பெண்மை, பயம், பயணம், உறவு, ஆன்மீகம் என பலவற்றை தெரிந்து கொள்ளலாம்.
வாருங்கள் பயணிப்போம்!
உங்களை நீங்கள் எப்படி அடையாளம் காண்கிறீர்கள்?
என் அம்மா எனக்கு பாரதியாரின் புத்தகம் ஒன்றைத் தந்தார். அதில் வரும் “நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை” என்ற வரி என்னுள் ஆழமாகப் பதிந்தது. அதன் பிறகு நான் நேராக நடக்கவும், பேசும்போது எதிரில் உள்ளவரின் கண்களை நேராகப் பார்க்கவும் தொடங்கினேன்.
என்னுள் பாரதியின் புதுமைப்பெண் இருப்பதாக நான் நம்புகிறேன். அதே நேரத்தில் நிலையான மனமும், பரிவும், எல்லா கலை வடிவங்களின் மீதும் தீவிரமான ஆர்வமும் கொண்டவளாக இருக்கிறேன்.
கலை என்றால் என்ன?
என்னைப் பொறுத்தவரை, கலை என்பது கலாசாரம்.
மனம், உணர்வு, கற்பனை, மூன்றும் சேர்ந்து உருவாகும் ஒன்று. அது நிரந்தரமானது.
உங்கள் கவிதைப் பயணம் எப்படித் தொடங்கியது? முதல் கவிதை எழுதிய அனுபவம் எப்படி இருந்தது?
நம் அன்புக்குரியவர்கள் நம்மை விட்டு தூரத்தில் இருக்கும் போது அவர்களை நாம் அதிகமாக நினைக்கத் தொடங்குகிறோம். என் கணவர் வேலை காரணமாக என்னை விட்டு விலகி இருந்தபோது, அவரை நினைத்து எழுதிய கவிதையே என் முதல் கவிதை.
அந்தக் கவிதையின் பெயர் — “என்றென்றும்.”
நீங்கள் கவிதை எழுதும் போது உங்களுக்கான நடைமுறை (Creative Process) ஏதாவது உள்ளதா?
ஆம். நான் கவிதையை ஆரம்பத்திலிருந்து எழுதுவதில்லை.
என்னை ஏதாவது கவர்ந்தாலோ, ஊக்கமளித்தாலோ; அது கவிதையின் நடுப்பகுதியாக இருக்கலாம், அல்லது முடிவாக இருக்கலாம்; அந்த ஒரு வரி தான் மெல்ல முழுக் கவிதையாக மாறும்.
உங்களுக்கு உத்வேகம் (Inspiration) எதிலிருந்து வருகிறது?
என்னிடம் எதுவுமே உத்வேகமாக மாறலாம், ஒரு எறும்பு கூட.
ஒருமுறை, ஒரு ஏழை தொழிலாளி முதுகில் பெரிய சுமையுடன் நடந்தார். வியர்வை வழிய, அவர் மூக்கில் ஒரு ஈ வந்து உட்கார்ந்தது. கைகள் சுமையில் பிணைந்திருந்ததால், அவர் தலை ஆட்டி அந்த ஈயை விரட்ட முயன்றார்.
அந்தக் காட்சி என்னுள் எழுதிய வரிகள் —
இரு கோடுகள் :
முதுகில் அழுத்தும் சுமை பெரிதாய் தெரியவில்லை,
மூக்கில் உட்கார்ந்து இம்சிக்கும் ஈ !!!
பாடலாசிரியராக எழுதும் போது, அது கவிதை எழுதுவதைவிட எப்படி வித்தியாசமாக இருக்கும்?
அதிக வித்தியாசம் இல்லை. பாடலாக இருந்தாலும், கவிதையாக இருந்தாலும் இரண்டும் இதயத்திலிருந்தும் சிந்தனையிலிருந்தும் தான் வருகிறது.
உங்கள் கவிதைகளில் காதலின் துள்ளல், பெண்மையின் அனுபவம், ஆன்மீகத்தின் ஏக்கம் எல்லாமே ஒன்றாக வழிந்தோடுகிறதே… எப்படி?
என் கவிதைகள் என் உணர்ச்சிகள். அவை என் ஆன்மாவின் பிரதிபலிப்பு. அவை என் மனநிலையையும், என் சுற்றுப்புறத்தையும், என் பார்வையையும் மாற்றுகின்றன.
உங்களுக்கு பிடித்த தமிழ் / உலக கவிஞர்கள் & எழுத்தாளர்கள் யார்? ஏன்?
வைரமுத்து —
அவரின் திரைப்படப் பாடல் வரிகளும் கவிதைகளும் எனக்கு மிகவும் பிடித்தவை. உதாரணத்திற்கு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் எங்கே எனது கவிதை பாடலிலிருந்து இந்த வரி,
“மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவி துருவி உனைத் தேடுதே…”
பிரிவின் வலி அங்கு உயிர் பெறுகிறது.
கஹ்லீல் ஜிப்ரான் —
அவரின் எளிமை எனக்கு மிகவும் பிடிக்கும். ஏழு வயது குழந்தைக்கும் புரியும் வரிகள்.
அவரின் “FEAR” எனும் கவிதை எனக்கு மிகவும் நெருக்கமானது.
தமிழில், பாலகுமாரன், சாண்டில்யன், சுஜாதா எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள். பாலகுமாரனின் ஆரம்பகால படைப்புகள் உறவுகள், காதல், ஆசை பற்றியவை. பின்னர் அவர் ஆன்மீகத்துக்குச் சென்ற மாற்றம் அற்புதமானது.
எதிர்காலத்தில் உங்கள் கலைப் பாதையில் எந்தக் கனவு உங்களை அழைக்கிறது?
இளமையில் நான் ஓவியம் வரைந்தேன். சில வருடங்களாக அந்த ஆர்வத்தை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு வருகிறேன்.
மீண்டும் கற்றுக் கொண்டு லேண்ட்ஸ்கேப் ஓவியங்கள் வரைய வேண்டும் என்பது என் கனவு.
இன்றைய கலைஞர்களுக்காக நீங்கள் சொல்ல விரும்பும் ஒரு அன்பான அறிவுரை?
உங்கள் ஆர்வத்தை எப்போதும் உயிரோடு வைத்திருங்கள். ஒவ்வொருவரிலும் ஒரு பிறவிக்குணத் திறமை இருக்கிறது. அதை கண்டுபிடித்து
தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.
கலை இல்லாமல் மனித வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
கலை வேறு நாம் வேறு அல்ல!கலை இல்லாமல் வாழ்க்கை பாலைவனத்துக்கு சமம்.
இன்றைய உரையாடலை நிறைவு செய்ய, உங்களுடைய ஒரு கவிதையை எங்களுடன் பகிர முடியுமா?
கண்டிப்பாக …ஒரு கவிதை என்ன , நிறையவே பகிர்கிறேன்.
மகனுக்கு ஒரு மடல்
அன்புள்ள மகனே நலமா,
கையிலிட்ட மருதாணி நிறம் மாறுமுன், புதுத்தாலி மின்ன
அயல் நாடு அழைத்துச் சென்ற உன் அன்பு மனைவி நலமா.
கருவறையிலிருந்தே ஆரம்பமாகும் தாயின் அறிவுறை -அது
தொடந்து கொண்டே இருக்கும் தாய் இருக்கும் வரை.
வேருடன் எடுத்து வேறிடம் நட்டாலும்–வேற்று மண்ணில்
வேறூன்றி வளரும் தாவரம்தான் பெண்,
விழிகள் குளமாக தாய் வீடு பிரிந்தாலும்,
புது உறவுகள் ஏற்று ஆர்வமும் ஆசையுமாய்
புகுந்த இடம் மலரச் செய்பவள் அவள் .
சமைப்பதை அவள் கடைமை என்று நினைக்காதே
மனதாரப் பாராட்டு ,கைப்பிடித்து முத்தமிடு
பாராட்டு போதை தரும்,
போதை இன்னும் நெருக்கம் தரும்.
புரிதலும் பரஸ்பரம் விட்டுக்கொடுத்தலும்
மண வாழ்க்கையை இனிதாக்கும்
மனைவியை மதித்து நடக்க
உன் மதிப்பு உயரும்–
மற்றவர் மத்தியில்..
காதலியாய் ,தாயாய் அன்பான தோழியாய்
கணக்கில்லா அவதாரம் எடுப்பவள் பெண்…
காலங்கள் கொண்டு வரும் எல்லா தருணங்களிலும்-உன்
கைப்பிடித்து நடக்க வந்த தேவதை.
ஆசையும் மோகமும் ஆயுட்காலம் நீடிக்க
அளவில்லா செல்வங்கள் அத்தனையும் கிடைக்க
அற்புதமாய் இல்வாழ்கை அழகாய் அமைய
அம்மா எந்தன் ஆயிரம் கோடி ஆசிகள்!
©திருமதி லலிதா பஞ்சாபகேசன்
பயணத்தின் முடிவில்…
பயணங்கள் எப்பவவுமே
அவனுக்கு பயத்தை தருகிறது…..
இரவு நேர பேருந்து பயணங்களில் அவன்
உறங்குவதே இல்லை
இரவை கிழித்து கொண்டு ஓடும் வேகத்தில்
ஓட்டுனரின் ஒரு கணத்து கண் அசர்வில்,
விபத்தின் விபரீதமாய்
உறக்கத்திலேயே உயிர் போக நேருமென்று…
சுகமான இசையும் மிதமான குளிருமாய்
சொகுசு காரின் சொர்கமான பயணமும்
நரகமாகிறது
எதிர் வரும் வாகனங்கள் எல்லாமே
எமனாகத் தெரிவதால்…
அழகான பெண்கள்
அன்பான உபசரிப்பு
ஆயிரமாய் கொட்டிய ஆகாய பயணத்தில்
வயற்றில் பெல்டுடன்
பயத்தையும் கட்டிக் கொள்கிறான்
பற்றி எறிய நேரிட்டால் பஸ்மம் கூட மீராதென்று
இரு சக்கிர பயணமோ
இன்னமும் பயம்
தலை தெரிக்க வரும் தண்ணீர் லாரி விபத்துகளில்
தலைக் கவசங்களாலும் தவிர்க்க முடியாது
உயிர் சேதத்தை…
இவை எதிலும் போகாமலேயே
அவன் உயிர் பிரிந்தது…
ஒரு மழை கால இரவில், சலனமேதுமின்றி
நடந்து செல்கையில்
திறந்திருந்த பாதாள சாக்கடைக்குள் விழுந்து,
முழுகி,மூச்சுத் திணறி….திணறி….
©திருமதி லலிதா பஞ்சாபகேசன்


Artist Bio: Smt. Lalitha Panchapakesan
From the age of 13, Lalitha Panchapakesan discovered her voice through words, first in heartfelt poems, then in devotional songs and lyrical compositions. Her love for literature was nurtured early by her mother, who gifted her the works of the legendary Bharathiyar. Those pages didn’t just inspire her; they ignited a lifelong fire of creativity.
A true artist at heart, Lalitha’s talents span across art forms. She learned violin and veena, sings with melodious grace, and is a prolific poet whose works have appeared in leading magazines like Managayar Malar, Aval Vikatan, and Snehithee and also in Thendral – Washington USA. Beyond words and music, her creativity flows into everything she does, from cooking and baking to tailoring and fashion design.
After her marriage, Lalitha continued to write songs and poems while exploring new passions. Her curiosity led her into the world of beauty and cosmetology, where she successfully ran her own beauty parlour for over 15 years, a testament to her entrepreneurial spirit. At 60, while many slow down, Lalitha simply found a new canvas. She began painting classes, soon discovering a flair for handcrafted art and jewellery design. What began as a pastime blossomed into a thriving business that’s been running successfully for over a decade.
Today, her boundless energy and creativity continue to inspire many. Through her YouTube channel, Lalitha shares her music, album covers, and original compositions, proof that passion, once sparked, never fades. A woman of many gifts and unwavering determination, Lalitha Panchapakesan embodies the truth that creativity knows no age, only purpose, curiosity, and heart.
கலை பற்றிய இந்த உரையாடல் இங்கே முடிந்தாலும், அதன் ஒலி உங்கள் உள்ளத்தில் இன்னும் ஓடிக்கொண்டே இருக்கட்டும்.
Though this conversation on art ends here, may its echo continue within you, until next post.

