என் உலகின் முதல் கலைஞர்

கலை என்றால் என்ன?

இது பல நேரங்களில் ஒரு படைப்பாளியின் உள்ளே எழும் கேள்வி.
கலை என்றால் என்ன? படைப்பு எதற்காக? அதன் பயன் என்ன?

என்ன படைத்தாலும் — “இதனால் என்ன பயன்?” என்று தன்னைத் தானே அடிக்கடி கேட்கும் தன்மை ஒரு படைப்பாளிக்கே உரியது. எனக்கும் இப்படிப்பட்ட சந்தேகங்கள் பல முறை தோன்றும். ஆனால் சில சமயம் அமைதியாக உட்கார்ந்து சிந்திக்கும் போது பதில் கிடைக்கும்; சில வேளைகளில் பிறருடன் உரையாடும் போதும் வெளிப்படும்.

அப்படி எனக்குத் தோன்றிய பதில் இதுதான்:

கலை என்பது மனிதரின் உள்ளுணர்வையும், உணர்ச்சிகளையும், சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் ஒரு வழி.
அது ஓவியம், இசை, நடனம், எழுத்து, சமையல், தோட்டம்—எதுவாகவும் இருக்கலாம்.
வெளியுலகத்துடன் பேசாமலேயே “நான் யார், நான் எப்படி உணர்கிறேன்” என்பதைக் காட்டிக் கொடுக்கும் பாசாங்கற்ற மொழி தான் கலை.

சிலருக்கு கலை ஒரு ஆசை; சிலருக்கு அது ஆதாரம்; சிலருக்கு அடையாளம்.
ஆனால் யாருக்குமே அது “உள்ளிருந்து வெளியில் பாயும் உயிரின் ஓசை” போலவே இருக்கும்.

இது என்னுடைய அபிப்பிராயம். ஆனால் மனதில் எப்பொழுதும் மற்றவர்களின் பார்வையில் கலை என்னவாக இருக்கும், ஒரு கலைஞரின் சிந்தனை, படைப்பு, செயல்முறை எப்படிப்பட்டது, எல்லா கலைஞர்களும் புரிந்துகொள்ளப்படுகிறார்களா, அங்கீகரிக்கப்படுகிறார்களா என்ற கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும்.

அப்படிப் பட்ட ஆர்வத்தில்தான் இந்த “கலையும் கலைஞரும்” என்ற தொடரின் யோசனை உருவானது.
இது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகும் மாதாந்திரத் தொடர்.
இதன் மூலம் கலை, கலைஞர்கள், அவர்களின் சிந்தனைகள், செயல்முறைகள் மற்றும் தத்துவார்த்தங்களை அறியும் ஒரு பயணம் அமையும்.

அந்தப் பயணத்தின் முதல் அத்தியாயமாக—
எனக்கு முதல் கலையாகவும் முதல் கலைஞராகவும் தோன்றிய, இன்னமும் தினமும் என் வாழ்வில் தோன்றிக்கொண்டிருக்கும் என் அம்மா, திருமதி லக்ஷ்மி ஸ்ரீனிவாசன் அவர்களுடனான உரையாடல் இதோ உங்கள் முன்னே.

அம்மா, உங்கள் அபிப்ராயத்தில் கலை என்றால் என்ன?

அம்மா:
“அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது” என்று அவ்வையார் சொன்னார். கடவுள் கொடுத்த இந்த மனிதப் பிறவி தான் மிகப் பெரிய கலை. நல்ல தேகத்தைக் கொடுத்து பிறக்க வைத்ததே வாழ்வின் முதல் கலை.

அதற்குப் பிறகு, நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு விஷயமும் கலைதான். காலை எழுந்து சுவாசிப்பது, ஒரு நிம்மதி அடைவது, வாசலில் கோலம் போடுவது, சமையல் செய்வது — இவை அனைத்துமே கலை. அன்போடும் ஆனந்தத்தோடும் பார்த்தால், வாழ்க்கையே மிகச்சிறந்த கலை.

இயற்கையில் உங்களுக்கு எப்படி கலை தெரிகிறது?

அம்மா:
கடவுள் படைத்த உலகமே கலை. ஒரு புல், ஒரு பூச்சி, எறும்பு — எதைப் பார்த்தாலும் அதில் அற்புதம் இருக்கிறது. ஒரு வெள்ளரி பிஞ்சு தான் முதிரும் சமயம் அறிந்து கொடியிலிருந்து விடுபட்டு கொள்வதும்எறும்பு மழை வரப்போகிறதென்று உணர்ந்து தன் உணவைச் சேமிப்பது கூட கலை தான்.

ஒரு தாயின் கருவறையில் பத்து மாதம் குழந்தை வளர்வது எவ்வளவு அழகான கலை! பிறப்பு, மரணம் — எப்போது, எப்படித் திடீரென்று நடக்கிறது என்பதை யாராலும் சொல்ல முடியாது. அந்த அதிசய சக்தியே கடவுள், அதுவே கலை.

உங்கள் வாழ்க்கையில் கலை என நீங்கள் மதிப்பது என்ன?

அம்மா:
வாழ்க்கை வாழ்வதற்கே. அதை அழகாக அனுபவித்து, தானும் மகிழ்ந்து, மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி கொடுக்க வேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், “சர்வம் கிருஷ்ணார்ப்பணம்” என்ற மனநிலை வந்தால், அதுவே வாழ்வின் அழகான கலை.

பிரபலமானவர்கள் தான்  கலைஞர்கள் என்று பலர் நினைக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்லுவீர்கள்.

அம்மா:
என்னை பொறுத்தவரை கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொருவரும் கலைஞரே. எந்த எதிர்பார்ப்புமின்றி, அன்போடு செய்யும் செயல் அனைத்துமே கலை தான்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேளையிலும் நேர்த்தியும் அழகும் வழிந்தோடுகிறது. தொட்டதெல்லாம் கலையாக மாறுகிறது. எழுத்து, சமையல், தோட்டக்கலை, கோலமிடுவது , எல்லாமே…ஆனால் இன்றைய காலத்தை போல் எதையும் உடனுக்குடன் வெளியுலகிற்கு புகைப்படம் எடுத்து காட்டியதே இல்லை …மேலும் எதில்  இருந்தும் பொருள் ஈட்ட முயன்றதில்லை …எப்படி எந்த ஒரு வருமானமோ எதிர்பார்ப்போ இல்லாமால் அனைத்திலும் ஈடுபாடுடன் செய்ய முடிகிறது ?

அம்மா:
அதற்க்கு காரணம் பொறுமை. அதற்க்கும் மேலாக கலையை கலைக்காகவே பார்ப்பது. அப்படி எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், முழு மனதுடன் எந்த ஒரு வேலையை நேர்த்தியாக செய்யும் போதும் , அது செய்து  முடிக்கும்போது கிடைக்கும் திருப்தியே சன்மானமாகவும் சந்தோஷமாகவும் மாறுகிறது. வேறு என்ன வேணும்  சொல்லுங்கள்?

புதியதாக தொங்கும் கலைஞர்களுக்கு நீங்கள் தர விரும்பும் அறிவுரை என்ன ?

அம்மா:
எல்லா விஷயத்தையும் ஆசையுடன் அனுபவித்து செய்யுங்கள்.

சரி…ஒரே ஒரு கவிதை ப்ளீஸ்

அம்மா:
கடவுளின் படைத்தல் கலையை வியந்தேன்
என் அம்மாவின் பொறுமை எனும் கலையை கற்றேன்
அப்பாவின் செய்யும் செயலின் நேர்மையை அறிந்தேன்
ஆசானிடம் எல்லாவற்றிலும் ஆனந்தத்தை அடைவதை கற்றேன்
வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்க்கை அழகான கலை
அதை அழகாக அனுபவித்து
அனைவருக்கும் இன்பத்தை அளிப்போம்


ஆயர் கலைகள் 63 ம்
நாம் வாழும் அழகான வாழ்வில்
அனைவரும் அடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

ஆஹா அருமை!!

இந்த உரையாடலால் நான் உணர்ந்தது —
கலை என்பது பிரபலமான பெயரில் மட்டுமல்ல; பெரிய மேடைகளில் மட்டுமல்ல.
அது நம் அன்றாட வாழ்க்கையிலேயே உள்ளது.

கலை வாழ்வில் இருக்கிறது; வாழ்வே கலை.

என் வாழ்க்கையில் நான் சந்தித்த முதல் கலைஞர் — என் அம்மா.
அவரின் பொறுமையும், அன்பும், எளிமையும் எனக்குக் கற்றுத்தந்த மிகப்பெரிய கலை.

இந்த தொடரும் அவரோடு துவங்குவது அதற்கேற்ற அர்த்தமுள்ளதாக எனக்குத் தோன்றுகிறது.

வரும் அத்தியாயங்களில் இன்னும் பல கலைஞர்களின் குரல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

இந்த உரையாடலை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? உங்கள் எண்ணங்களை கீழே கருத்துக்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.